சொல்கதைகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் ‚ராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் 'தேவர்கள்' என்ற சிறப்புப் பெயர் பெற்றனர். எத்தனையோ காலமாக 'சேதுசமுத்திரம்' எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே 'சேதுபதி' மன்னர் என்ற பெயரும் பெற்றார்.
மேற்கண்ட இரு தகவல்களும் நமக்குச் சொல்வது என்னவெனில் ராமநாதபுரம் பகுதியே ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி. அங்கிருந்து புலம் பெயர்ந்தே இவர்கள் அருகிலிருந்த திருநெல்வேலிச்சீமை போன்ற பிற பகுதிகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்பதே. மறவர்கள் எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் தங்கள் தலைவர் எனும் மரியாதையை மன்னர் சேதுபதிக்கே அளித்து வந்தனர் என்பதை 'மறப்பாட்டு' சொல்கிறது. சண்டையிடும் இனமாக மறவர் பற்றிய முதல் குறிப்புகளைக் 'குல வம்சம்' தருகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பாண்டியர்களோடு மரபு உரிமை பற்றிய தகராறில் கொண்டையம்கோட்டை மறவர்கள் பங்கேற்றது பற்றியும் 'குலவம்சம்' பேசுகிறது. சேதுபதி மன்னரின் தலைமையின் கீழ் இருந்த மறவர்கள், மதுரை பாண்டிய மன்னனைச் சார்ந்தே இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மறவர், கள்ளர், அகமுடையார்களுக்கிடையே நெருங்கிய உறவு இருக்கிறது. 'கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்லவே வெள்ளாளரானார்' எனும் பழமொழி வழக்கிலுள்ளதை அறிவோம். அடிப்படையில் தங்கள் தலைவர்களுக்கு ராணுவ சேவை அல்லது காவல் கடமைகள் ஆற்றி வந்த இனமாகவே மறவர்கள் இருந்தனர். இதே நிலைமைதான் கள்ளர்களுடையதும். கள்ளர்கள் முதலில் தஞ்சைப் பகுதியில் இருந்து வந்துள்ளனர். பின்னர் பதினோராம் நூற்றாண்டில்தான் பாண்டிய அரசுப் பகுதிக்கு வந்து குடியேறினர்
தேசக்காவல் அமைப்பில் பல கிராமங்கள், ஒருதலைவரின் ஆளுகையின் கீழ் இருக்கும். இக் கிராமங்களின் தலைவராகக் காவல் தலைவராக அவர் இருப்பார். இதுவும் மறவர்களுக்கானத் தனிவகையான அமைப்பாகும். இதன் மற்ற முறைகளெல்லாம் ஸ்தல காவலையே ஒத்திருந்தன. கிராமங்களில் காவல் பணிபுரிந்த தலைவர்கள் தேசக்காவல் தலைவருக்குக் கட்டுப்பட்டு இருந்தனர். கிராமங்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளைத் தேசக்காவல் தலைவர்கள் தீர்த்து வைத்தனர். இந்தத் தீர்ப்பு மறு பேச்சில்லால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கு 'தேசக்காவல்' என்ற பெயரில் ஒரு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
தங்கள் பகுதிகளில் மறவர் பாளையக்காரர்களும் தேசக்காவல் தலைவர்களாக இருந்துள்ளனர். இதனை மறவர் தலைவர்களுக்கும், நாயக்கப் பாளையக்காரர்களுக்கும் இடையே எழுந்த பல 'காவல் சச்சரவு'களில் இருந்து அறிய முடிகிறது
1776 இல் நாங்குநேரி மறவர்களுக்கும், நாயக்கப் பாளையக்காரரான பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனுக்கும் இடையே நடைபெற்ற போர் குறிப்பிடத்தக்கது. நாங்குநேரி மற்றும் களக்காடு மறவர்கள் முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தாங்கள் தேசக்காவல் உரிமையைப் பெற்றிருந்தமையால் நாயக்கர்கள் அதில் தலையிடக் கூடாது என்றனர். இதன் மூலம் நாயக்கர்களுக்கு முன்பே மறவர்கள் தேசக்காவல் தலைமை ஏற்றிருந்தனர் என்பது உறுதியாகிறது. தேசக்காவல் முறை 1780 முதல் 1781 வரையிலான காலத்தில் மிக உச்சத்தில் இருந்தது. காவல், நீதி மற்றும் நிர்வாக அதிகாரங்களைத் தேசக்காவல் தலைவர் செலுத்தி வந்தார். இத் தலைவர்கள் தங்களுடன் எப்போதும் சிஷ்யர்களை வைத்திருந்தனர். இவர்கள் அநேகமாகப் பள்ளர் இன மக்களாக இருந்தனர்.
காவல் அமைப்பு மறவர்கள் ஒரு தலைவரின் கீழ் ஒன்றுபட்டு நிற்கவும் அத் தலைவரை வலுவானவராக நிறுத்தவும் வாய்ப்பாக அமைந்திருந்தது. மைய நிர்வாகம் சீர்குலைந்தபோது ஊர்களின் பாதுகாப்பு அவர்கள் கையில் இருந்தது.
மறவர்கள் கோட்டைகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். எனவே அந்த கோட்டைகளின் தன்மைகளுக்கு ஏற்ப பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.